May 19, 2024
Based on SLB discussion forums at the South Eastern University and in Batticaloa, this blog explores perceptions of reconciliation in Sri Lanka's Eastern Province. It focuses on people's experiences and the current state of unity among different ethnicities after the war.
சமூக நல்லிணக்கம் தொடர்பான புரிதல்கள் கிழக்கு மாகாண மக்களால் தங்களுடைய சமூக வாழ்க்கை அனுபவங்களின் அடிப்படையில் வெளிப்படுத்தப்படுகின்றது. அந்த வகையில் இலங்கை மக்களைப் பொறுத்த வரைக்கும் சமூக நல்லிணக்கம் என்பது பல்லின மக்களுக்கிடையிலான சமூக ஒற்றுமைக்கான சூழலினை மையப்படுத்தியதாக அமைகின்றது. இது தொடர்பாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலும், மட்டக்களப்பிலும் முன்னெடுப்பட்ட இரண்டு கலந்துரையாடல்களில் கிழக்கு மாகாண மக்களால் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் இக்கட்டுரை எழுதப்படுகின்றது. இவ்விரண்டு கலந்துரையாடல்களிலும் இலங்கையில் நீண்ட யுத்தத்தின் பின்னரான தற்போதைய சூழ்நிலையில் சமூக நல்லிணக்கம் முன்னேற்றகரமாக இருப்பதாகவே கருதப்படுகின்றது.
தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் சமூக நல்லிணக்கத்திற்கான ஓர் மிகப்பெரிய சவாலாக இருப்பதாகவே இம்மக்களுடைய கருத்துக்கள் அமைகின்றன. குறிப்பாக மக்கள் மத்தியில் பன்மொழித்திறன் குறைவாக இருப்பது சகோதரத்துவ மக்களுக்கிடையிலான இடைவெளியினை அதிகரிப்பதாக கருதுகின்றனர். மேலும், தங்களுடைய சுய மற்றும் சமூக அனுபவங்கள் மூலம் தாம் எதிர்கொண்ட கசப்பான அனுபவங்களை குறிப்பிடுவதன் மூலமும் சமூக நல்லிணக்கத்திற்கான தடையினைப்பற்றி வெளிப்படுத்தியிருந்தனர்.
மேலும். தொடர்கலந்துரையாடலில், யுத்தகாலத்தில் தங்களுடைய இழப்புக்களை நினைவு கூறுகின்ற ஒரு நிகழ்வு பற்றியும், அனைவருக்குமான நீதி எந்த அளவுக்கு சமூகத்திலே நிலைநாட்டப்படுகின்றது என்பது பற்றியும், தங்களுடைய அடையாளத்தினுடைய முக்கியத்துவம் மற்றும் அதன் வெளிப்பாடு பற்றியும், ஏனைய சமூகங்களுக்கிடையிலான ஒரு நம்பிக்கை மற்றும் அனைவருக்குமான சமனான வாய்ப்புக்கள் பற்றியும், மக்களுடைய அரசியல் பங்குபற்றல் மற்றும் அவர்களுடைய சமூக நல்வாழ்வுக்கான ஒரு பாதுகாப்பு மேலும் இந்த நல்லிணக்கத்தினை உருவாக்குவதற்கு ஒவ்வொருத்தருக்கும் இருக்க வேண்டிய பொறுப்பு பற்றியும் மக்கள் தங்களுடைய கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.
இக் கலந்துரையாடல்கள் அனைத்தும் இலங்கையின் பரோமீட்டர் ஆய்வின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட முடிவுகளின் அடிப்படையிலேயே அமைந்ததன் காரணத்தால் இது சார்ந்தே மக்கள் தங்களுடைய கருத்துகளை முன்வைத்துள்ளனர். மேலும் இவ்வாய்வில் மேலதிகமாக கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள் பற்றியும், ஆய்வு முடிவுகளை வேறு எவ்வகையில் அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்க முடியும் போன்ற விடயங்கள் பற்றியும் இக்கலந்துரையாடல்களில் கவனம் செலுத்தப்பட்டிருந்தது.
சமூக நல்லிணக்கம் பற்றி குறிப்பிடும் மக்கள், அவர்களுடைய சூழல் சார்ந்தும் சமூகம் சார்ந்தும் மற்றவர்களோடு ஒருங்கிணைந்து வாழ்வதில் இருக்கும் சவால்களை முன்னிலைப்படுத்தி சவால்களை நிவர்த்தி செய்யும் முகமாகவே நல்லிணக்கம் உருவாக்கப்பட வேண்டும் எனும் தொனியில் முன்வைத்திருந்தனர். அந்த வகையில் இலங்கை யுத்தத்துக்குப் பின்னரான சமூக சூழ்நிலையில் இருப்பதனால், இன ஒற்றுமை, அனைவருக்குமான சமூக அரசியல் பொருளாதார ரீதியான சமத்துவம், இன மத பேதங்கள் அற்ற ஒற்றுமை, சமூகங்களுக்கு இடையிலான புரிந்துணர்வு போன்ற பல விடயங்களை சமூக நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கான அடிப்படை விடயங்களாக இம்மக்கள் கருதுகின்றனர்.
சமூக நல்லிணக்கத்திற்கான தடைகள் மற்றும் சவால்கள் தமக்கு வெளியே இருப்பதாகவே தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். குறிப்பாக, தமது பிரதேச அரசியல்வாதிகளுடைய செயற்பாடுகள் சமூக நல்லிணக்கத்தில் இடைவெளியை ஏற்படுத்துவதாகக் கருத்து தெரிவித்திருந்தனர். மேலும், மொழி தொடர்பான சவால்களை பற்றி கூறும்போது குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களுக்கு தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளிலும் பரிச்சயம் இல்லாத ஒரு விடயம் சமூக நல்லுறவை கட்டியெழுப்புவதற்கு தடையாக சுட்டிக்காட்டப்பட்டது. அதே கலந்துரையாடலில் வெளிப்பட்ட இன்னும் ஒரு கேள்வி, “மொழி ஒரு பிரதானமான தடையா” என்பதனை மீண்டும் ஒரு முறை யோசிக்க வைத்தது. அதாவது கிழக்கில் தமிழ் மொழியினை பேசுகின்ற தமிழ் முஸ்லிம் மக்களிடையே ஏன் சமூக நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முடியாமலிருக்கிறது? எனும் கேள்வியினை எழுப்பும் போதுதான் இதனைவிட பிரதானமான விடயங்கள் சமூகத்துக்குள்ளே இருக்கின்றன:அவை கண்டறியப்பட்டு தீர்வு காணப்பட வேண்டும் என்ற கருத்து இங்கு பிரதான மயப்படுத்தப்பட்டது.
சமூக நல்லிணக்கத்தினை உருவாக்குவதற்கான பொறுப்பு இலங்கையில் வாழ்கின்ற ஒவ்வொருத்தருக்கும் இருக்க வேண்டும் என்பதனை கலந்துரையாடலில் பங்கு பற்றிய அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர். மேலும் சமூக நல்லிணக்கத்துக்கான தேவையானது, யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் கடந்திருந்தாலும், இன்னும் அதிகளவில் இருப்பதாகவே மக்களுடைய கருத்துக்கள் அமைகின்றன.
குறிப்பாக ‘அரகல‘ போராட்டத்துக்கு பிறகு சமூக நல்லிணக்கத்திற்கான வாய்ப்புக்கள் மக்கள் மத்தியில் அதிகரித்திருப்பதாக கருதும் அதேவேளை, அண்மைக்கால தொல்பொருள் ஆராய்ச்சி நிலையத்தின் செயற்பாடுகள் மற்றும் புதிய விகாரைகள் அமைக்கும் பணிகள் மக்கள் மத்தியில் இருக்கின்ற நல்லிணக்கத்தினை பாதிப்பதாகவும் மக்கள் கருதுகின்றனர்.
யுத்தத்திற்கு பின்னரான சமூக சூழ்நிலையில் வாழும் மக்கள் தமது யுத்தகால இழப்புக்களை நினைவுகூர்கின்ற செயற்பாடு தொடர்பான கருத்துக்களை முன்வைக்கும் போது கலந்துரையாடலில் பங்கு பற்றியவர்கள் இடையே வேறுபட்ட கருத்துக்கள் இருப்பதனை உணர முடிந்தது. அதாவது இழப்புக்கள் நிச்சயமாக நினைவு கூறப்பட வேண்டியவை தான் ஆனாலும் அது இன முரண்பாடுகளை தோற்றுவிக்கும் என்ற வகையில் அமையக் கூடாது என்ற கருத்தினை வலியுறுத்தினர். அதாவது இன முரண்பாடுகள் மூலம் ஒவ்வொரு இனத்திற்கும் கசப்பான அனுபவங்கள் நிறையவே இருக்கின்றன. ஆகையால் அதனை நினைவு கூறும் போதும் அதனுடைய வரலாற்றைக் கூறி மற்றைய இனத்தினை தாக்குகின்ற சம்பவங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. அதே போல சில இழப்புக்கள் இடம்பெற்றதனை தடயங்களாக இன்று வரை பாதுகாப்பதும் இளம் தலைமுறையினர் மத்தியில் சமூக நல்லிணக்கத்துக்கான மனநிலையில் பாதிப்புகளை ஏற்படுத்த முடியும் எனக்கருதுவதால், நினைவுகூறும் போதும் இழப்புக்களை மாத்திரம் நினைவுகூறுவதும் அதற்கான பின்னணிகளை வலியுறுத்தாமல் இருப்பதும் சமூக நல்லிணக்கத்திற்கான ஒரு அடிப்படியாக அமையும் என்ற கருத்ததையும் முன்வைத்தனர்.
இலங்கையில் வாழும் மக்கள் அனைவரும் இன மத பேதமின்றி யுத்த வடுக்களை சுமந்தவர்களாகவே இன்றுவரை இருக்கின்றனர். ஆகையால் நினைவுகூரல் என்பது ஒரு உணர்வுபூர்வமான நிகழ்வாகும். அனைவரும் அனைத்து நினைவுகூறல்களையும் ஆத்மாத்த ரீதியாக மதிப்பார்கள் ஆனால் அது சமூக நல்லிணக்கத்துக்கான முதற்படியாக அமையும் எனும் கருத்து ஆணித்தரமாக எதிர்பார்க்கப்படுகின்றது.
யுத்த கால இழப்புகளுக்கான இழப்பீடுகள் தொடர்பான கருத்துகளைக் கேட்டறியும் போது அதனுடைய அவசியத்தை வலியுறுத்தும் அதேவேளை உண்மைத்தன்மையான விடயங்களை பகிர்ந்து கொள்வதன் ஊடாக இழப்பீடுகளுக்கான சேவையினை முன்னெடுக்க முடியும் எனும் விடயம் இம்மக்களால் எதிர்பார்க்கப்படுகின்றது. உதாரணமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விடயங்கள் பற்றிய கருத்துக்களை முன்வைக்கும் போது இதுவரை காலமும் இதற்கான ஒரு முடிவு எட்டப்படாத நிலை இவர்களால் சுட்டிக்காட்டப்பட்டது. இதற்கான காரணம் உறவுகளை இழந்தோர் தமது உறவுகளின் இழப்பை ஏற்க முடியாமல் இருப்பதும் இழப்பிற்கான காரணங்களின் உண்மைநிலை தெளிவாக வெளிப்படுத்தப்படாமல் இருப்பதும் கலந்துரையாடலில் கலந்து கொண்டவர்களால் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
இவ்விரு கலந்துரையாடல்களில் இருந்து அனைவருக்குமான நீதியானது வெவ்வேறு காரணிகளால் பாதிக்கப்படுவதாக சொல்லப்பட்டது. இதற்கான காரணங்களாக இரு மொழிகளிலும் பரிச்சயம் இல்லாத தன்மை, பிரதேச ரீதியான வேறுபாடுகள், மற்றும் இன ரீதியான வேறுபாடுகள், போன்றவை அமைகின்றன. மேலும் சமூக நல்லிணக்கத்தினை பாதிப்பதில் அனைவருக்குமான நீதி கிடைக்காமல் இருக்கின்ற சந்தர்ப்பங்கள் மிக பிரதானமான ஒரு பங்கினை வகிப்பதாக இவர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.
கலந்துரையாடலில் பங்குபற்றியவர்கள் தாம் ஒரு இலங்கையர் எனும் அடையாளத்தை உறுதிப்படுத்துவதில் உறுதியாக இருப்பதனை அவதானிக்க முடிந்தது. அதே நேரம் தமது இனம், மதம், பிரதேசம் போன்றவை அடையாளத்துக்கான காரணங்களாக முன்வைக்கப்பட்டாலும், இலங்கையில் சமூக நல்லிணக்கத்தினை உருவாக்க அனைவரும் ”இலங்கையர்” எனும் வகையில் ஒன்றிணைவதே ஒரே வழி என்னும் கருத்து கலந்துரையாடலில் பங்கு பெற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த ஒரு பொது உணர்வுதான் இலங்கையைப் பொறுத்த வரைக்கும் சமூக நல்லிணக்கத்திற்கான அடிப்படையான விடயமாக காணப்படுகின்றது. இவ்வுணர்வுதான் வேறுபட்ட அடையாளங்கள் மூலம் பிரிந்து வாழும் சமூகங்களை ஒன்றிணைக்கவும் நம்பிக்கையை ஏற்படுத்தவும் காரணமாக அமையும் என்பதும் வலியுறுத்தப்பட்டது.
ஏனெனில் தமது அடையாளத்தினை தமது சமூகம் சார்ந்து முன்னிலைப்படுத்தும் போது பாகுபாடு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக அமைகின்றது. இந்த பாகுபாடுதான் மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையின்மையை ஏற்படுத்தி முரண்பாடுகளையும் தோற்றுவிக்கின்றது. இச்சமூக சூழ்நிலை அனைவரும் சமனான வாய்ப்புக்களைப் பெற்று சாதாரணமான சமூக வாழ்க்கையை முன்னெடுப்பதற்கும் சவாலாக அமைகின்றது. சாதாரண சமூக வாழ்க்கையே சவாலாக இருக்கின்ற சந்தர்ப்பத்தில் சமூக நல்லிணக்கம் என்பது எதிர்பார்க்க முடியாத ஒன்றாக அமைகின்றது. ஆகவே வெளிப்படுத்தப்படும் அடையாளங்கள் பொதுவானதாக அமையும் சந்தர்ப்பங்களில், அவை சமூக நல்லிணக்கம் தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் அதனை குறுகிய காலங்களில் உருவாக்குவதற்கும் அடிப்படியாக அமையும்.
அண்மையில் இடம்பெற்ற அரகல போராட்டங்களில் தமது அடையாளங்களை முன்னிலைப்படுத்தாமல் அன்றாட சமூக வாழ்க்கை பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி, ஒன்றுகூடி வெளிப்படுத்திய உணர்வானது, எவ்வாறு ஒரு பொதுவான அம்சம் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமையும். குறிப்பாக காலி முகத்திடல் அரகல போராட்டங்களுக்கு பிறகு சமூக நல்லிணக்கம் அல்லது சமூக ஒற்றுமை அதிகரித்திருப்பதனை இவர்கள் சுட்டி காட்டியிருந்தனர்.
சமூக நல்லிணக்கத்திற்கான ஒரு காரணமாக அரசியல் பங்குபற்றலை நோக்கும் போது பரோமீட்டருடைய ஆய்வு முடிவுகள் சுவாரஸ்யமாக அமைகின்றன. காரணம்: ஏனைய மாகாணங்களை விட வடக்கு கிழக்கு மாகாணங்களில் அரசியல் பங்கு பற்றலுக்கான விகிதாசாரம் சிறிதளவு முன்னேற்றத்தை வெளிப்படுத்தி இருக்கின்றது. இதற்கான காரணங்கள் பற்றி கலந்துரையாடும் போது அண்மைக்கால பொருளாதார நெருக்கடிகளின் பின்னர் மக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில், அனைத்து இனமக்களுடைய பங்குபற்றலும் இருந்தமையால், எந்த ஒரு விடயத்தையும் அரசியல் பங்குபற்றல் ஊடாக அடைந்து கொள்ள முடியும் என்கிற உணர்வு தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதை உணர முடிகின்றது. இந்த ஒரு உணர்வுதான் மக்களுடைய அரசியல் பங்குபற்றலுக்கான ஆர்வத்தினையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில் அரசுதான் அனைத்து விடயங்களுக்குமான தீர்வினை பெற்றுக் கொடுக்க முடியும் எனும் கருத்து மக்கள் மத்தியிலே பதிந்துள்ளது.
சமூக நல்லிணக்கம் தொடர்பான கலந்துரையாடலில் பங்கு பற்றிய இளம் தலைமுறையினர் உடைய கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயங்களாக இருக்கின்றன. குறிப்பாக ஒரு நிரந்தரமான சமூக நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவது என்பது இங்கு வாழ்கின்ற ஒவ்வொருத்தருடைய மனநிலையிலும் மாற்றத்தினை ஏற்படுத்துவது மூலமாகவே கட்டியெழுப்ப முடியும் என்னும் கருத்து ஆணித்தரமாக வலியுறுத்தப்பட்டது. அவ்வாறான ஒரு சந்தர்ப்பம் ஏற்படுத்தப்படாமல் சமூக நல்லிணக்கம் தொடர்பாக எந்த ஒரு செயற்பாடும் வெற்றியடையாது என்னும் கருத்து தெளிவாக சொல்லப்பட்டது.
ஆகவே சமூக நல்லிணக்கம் தொடர்பான விடயங்களை முன்னெடுக்கும் போது குறிப்பாக அந்தந்த பிரதேசங்கள் சார்ந்து மக்களிடையே முரண்பாடுகளை தோற்றுவிக்க கூடிய விடயங்களை இனங்கண்டு அதற்கான தீர்வுகளை முன்வைப்பதைநல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு சிறந்த வழியாக இம்மக்கள் கருதுகின்றனர். இதன் போதுதான் அடையாளம், அரசியல் பங்குபற்றல், நினைவுகூறுதல், இழப்பீடு வழங்குதல் போன்ற அனைத்து விடயங்களுக்கும் வெற்றி அளிப்பதற்கான சாத்தியப்பாடு உருவாகும் என்பது இக்கலந்துரையாடல்களில் பங்குபற்றியவர்களின் உறுதியான நிலைப்பாடாகும்.
Kathirgarmathamby Krishnaraj is currently a Lecturer in Sociology and Anthropology at the Department of Social Sciences, Faculty of Arts and Culture, Eastern University. Previously, he worked as an Assistant Lecturer at the Department of Social Sciences, Eastern University and the Department of Sociology, University of Colombo. He graduated in Sociology and Anthropology from Eastern University and have also completed a Master's Degree in Conflict, Peace and Development Studies at Tribhuwan University, Nepal. He is also reading for a PhD in Anthropology at Deakin University, Australia. His research interests revolve around Religion, Social Formation, Post-war Development, conflict and Peace studies, Social Change and Socialization and Social Issues.